சதித்திட்ட குற்றசாட்டு: பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 05 ஆண்டு சிறை..!
Former French President Sarkozy sentenced to 5 years in prison
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு, 05 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007 முதல் 2012 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி, (70). இவர், 2007 தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய லிபியா அதிபர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் எழுந்தது.
அதாவது, மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவுக்கு நல்லுறவு ஏற்படுத்த உதவி செய்வதாக கூறி, கடாபியிடம் இருந்து இவர் நிதி பேருள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்திருந்தார்.

இந்நிலையில், கடாபியிடம் சர்கோஸி தரப்பினர் பணம் பெற்றதை, கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் உறுதி செய்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு பாரீஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பில் விசாரித்த நீதிபதி, முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அவருக்கு 05 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். அவர், இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வதாக இருந்தாலும், சர்கோஸி சிறையில் இருந்து கொண்டு தான் அப்பீல் செய்ய முடியும் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் தண்டனை குறித்து அறிந்ததும், அங்கிருந்த முன்னாள் அதிபர் சர்கோஸி கொந்தளித்து போயுள்ளார். அதனையடுத்து, பேட்டி அளித்த அவர் கூறியுள்ளதாவது: ''இன்று நடந்திருப்பது, சட்டத்தின் மிக மோசமான ஆட்சியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அவர்கள் நான் சிறையில் தான் படுத்துறங்க வேண்டும் என்று நினைத்தால், நான் அதற்கு தயார்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Former French President Sarkozy sentenced to 5 years in prison