கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்..!
Congress party members condemn Senthil Balaji saying he should not have done this
கரூர் நகர காங்கிரஸ் நிர்வாகியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்த்தது சர்ச்சையானது. கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடவடிக்கை கூட்டணியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று குறிப்பிட்டு, ஒரு போட்டோவை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலை நிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது, கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழக மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப்பதிவை செந்தில் பாலாஜி நீக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது: கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது. நானும் அதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார். அதன் பின்னரே அந்த பதிவு நீக்கப்பட்டது என்றும், இப்படி செய்வதால், முதல்வருக்கு தான் நெருக்கடி கொடுக்கின்றனர். அதனை தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜோதிமணி மிகவும் பெருந்தன்மை வாய்ந்தவர். பெருந்தன்மையுடன் தான் இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார் என்றும், கூட்டணி தர்மம் என்பது வேறு. இருந்தாலும் எம்பிக்கான மரியாதையையும், மதிப்பையும் ஜோதிமணிக்கு அளிக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளதாவது: திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதேநேரத்தில் திமுகவினர் காங்கிரசை மதிக்க வேண்டும் என்றும், அதனை பெரும்பாலான காங்கிரசார் விரும்புகின்றனர். காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்றும் தெரிவித்துளளார். அத்துடன், அதிகாரத்துக்கு வர முடியாது எனவும், தமிழகம் முழுவதும் காங்கிரசை நம்பி மக்கள் ஓட்டுப் போடுகின்றனர். ஓட்டு போட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் எங்கு இருந்தால் வளருமோ, எங்கு இருந்தால் கட்சிக்கு பலன் பெறுமோ அந்த கூட்டணியில் தொடர தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காங்கிரஸ் உறுப்பினர்களை திமுகவில் கட்டயாம் சேர்க்ககூடாது எனவும், இது கூட்டணியில் அதிருப்தியை வேகமாக பரவ செய்யும் என்றும், இந்த விவகாரத்தில் அவர்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும் எனவும், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியம். என்று கடுமையாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, கே.எஸ்.அழகிரி இது குறித்து கூறுகையில், 'காங்கிரஸ் நிர்வாகியை திமுகவில் சேர்த்தது அநாகரீகமான செயல்' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress party members condemn Senthil Balaji saying he should not have done this