அதிமுக பொதுச் செயலாளராக ஆசைப்படுகிறாரா டிடிவி தினகரன்..?
TTV Dinakaran aspires to become AIADMK General Secretary
என்டிஏ கூட்டணியில் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த டிடிவி தினகரன், தற்போது அதிமுகவில் சேரத் தயார் என்று அறிவித்துள்ளார். 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை கைப்பற்றுவதே அவரது நோக்கம் என்பதால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தவுடன், எடப்பாடி எதிர்ப்பாளர்களாக கருதப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டும் வேலைகளை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கினார். இதனால் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகிய 06 பேர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. இது குறித்து செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதன் பின்னர் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தும் வந்தார்.
இதனால் அதிமுக மோதலில் பாஜக நேரடியாக தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழுத் தொடங்கின. அதேநேரத்தில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், . டிடிவி தினகரனும் விலகுவதை அறிவித்து அதிர்ச்சியை தந்தார்.
இதனையடுத்து, இரு நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை, டிடிவி தினகரனை சந்தித்துப் பேசினார். அப்போது டிடிவி தினகரன் திடீரென்று பாஜகவுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி என்டிஏ கூட்டணியில் நான் சேர விரும்பவில்லை. ஆனால் அதிமுகவில் சேர விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், என்னைப் போல சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், பாஜகதான், அதிமுகவை உடைத்தது. எங்களை வெளியேற்றியதும், ஓ.பன்னீர்செல்வத்தை எங்களிடம் இருந்து பிரித்ததும், பின்னர் சேர்த்ததும் பாஜகதான் என்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், பன்னீர்செல்வம் பிரிவதற்கும் காரணம் பாஜகதான். இதனால் எங்கள் வெளியேற்றத்துக்கு காரணமான பாஜகவே தற்போது எங்களை அதிமுகவில் சேர்த்து வைக்க வேண்டும் என்று புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். ஆனால், என்டிஏ கூட்டணிக்கு டிடிவி தினகரன் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும், பாஜகவுக்கு நாங்கள் சீட் கொடுக்கிறோம்.
பாஜக, டிடிவிக்கு சீட் ஒதுக்கிக் கொள்ளட்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், டிடிவி அதனை ஏற்க மறுத்துள்ளார். அத்துடன், நாங்கள் அதிமுகவில் சேரத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு காரணம், அதிமுக கூட்டணி எப்படியும் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கும். இந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடிக்கு இறங்கு முகம் ஏற்படும் நிலை உருவாகும்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தொடர் தோல்விகளை சந்தித்தால் அவருக்கு பதில் டிடிவி தினகரனை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை தனது ஆதரவாளர்கள் மூலம் எழுப்பி கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே டிடிவி தினகரனின் எண்ணம் என்று தகவ்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே, அதிமுகவில் சேர வேண்டும் என்று கோரிக்கை புதிதாக டிடிவி தினகரன் எழுப்பத் தொடங்கியுள்ளார். இதனால் தான் அவர் இ.பி.எஸ்-ஐ முதல்வராக ஏற்க முடியாது என்று வெளிப்படையாக கூறத் தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிமுக, பாஜக கூட்டணி எழுந்திருக்கக் கூட முடியாமல் திணறி வருகிறதாக தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருது கூறியுள்ளனர். ஒரு பக்கம் அதிமுகவில் உள்கட்சிப் பூசல், மறு பக்கம் பாஜக மற்றும் டிடிவி தினகரனின் நெருக்கடியால், எடப்பாடி பழனிச்சாமியும் திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
TTV Dinakaran aspires to become AIADMK General Secretary