ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ராஷ்மிகா!
Rashmika Vijay Deverakonda marriage
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த வதந்தி குறித்து ராஷ்மிகா மனம்திறந்து பேசியுள்ளார்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் உச்சம் தொட்டு, தற்போது தமிழ் மற்றும் பாலிவுட்டிலும் பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது தொழிலில் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக திருமணம் தொடர்பான வதந்திகள் நீண்ட காலமாக ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாகவும், ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த செய்திகள் குறித்து இதுவரை இருவரும் நேரடியாக எந்த உறுதியான விளக்கமும் அளிக்கவில்லை. கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம், புன்னகையுடன் மழுப்பலான பதில்களையே வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கேட்டபோது, ராஷ்மிகா இந்த திருமண வதந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,“உண்மை என்னவென்றால், கடந்த 4 வருடங்களாக இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆனால் எப்போது பேச வேண்டுமோ, அப்போது நான் பேசுவேன்,” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.
இந்த பதில் ரசிகர்களிடையே மேலும் சஸ்பென்ஸை அதிகரித்துள்ளது. “ராஷ்மிகாவின் புன்னகையிலேயே பதில் இருக்கிறது” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக இருவரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதும், புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடியதும், தனித்தனியாக சென்றாலும் ஒரே இடத்தில் இருப்பதாக வெளியான புகைப்படங்களும், திருமண வதந்திகளுக்கு மேலும் தீ ஊற்றும் விதமாக அமைந்துள்ளன.
இவ்வளவு தகவல்கள் வெளியாகியும், திருமணம் குறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் இல்லாததால், பிப்ரவரி 26-ஆம் தேதி உண்மையிலேயே மணமேடை ஏறப்போகிறார்களா, அல்லது இது வழக்கமான கிசுகிசுவா என்பதைக் காலமே பதில் சொல்ல வேண்டும். தற்போது வரை, ராஷ்மிகா மந்தனா இந்த விவகாரத்தில் சஸ்பென்ஸை முழுமையாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
English Summary
Rashmika Vijay Deverakonda marriage