அஜித் – பாலா மோதல் விவகாரம்:அந்த அறையில் பாலாவுக்கும், ஏகேவுக்கும் நடந்தது இதுதான். உண்மையை உடைத்த தயாரிப்பாளர் எல்.சுரேஷ்
Ajith Bala clash This is what happened to Bala and AK in that room Producer L Suresh breaks the truth
நடிகர் அஜித்குமார் தற்போது சினிமாவை விட கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றன. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்ற பெயரை உடைத்த வகையில், ஒரே ஆண்டில் இரண்டு படங்களில் நடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இதற்குக் காரணம், கார் ரேஸில் முழு கவனம் செலுத்த வேண்டுமென்ற அவரது திட்டம்தான் என சொல்லப்படுகிறது. இருப்பினும், அந்த இரண்டு படங்களில் குட் பேட் அக்லி மட்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது; விடாமுயற்சி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
சினிமாவில் தன் தனித்த பாதையை உருவாக்கியதுபோல், கார் ரேஸிங்கிலும் அஜித் இன்று சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் முகமாக மாறியுள்ளார். உலகின் பல நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்றுவருகிறார். அவர் பங்கேற்கும் ரேஸ்களை காண ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு பிரபலங்களும் நேரில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ரேஸிங் வாழ்க்கை அஜித்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்பு பேட்டிகளைத் தவிர்த்து வந்தவர், சமீபகாலமாக ஊடகங்களுக்கு பேசத் தொடங்கியுள்ளார். விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்ற கொள்கையை வைத்திருந்த அஜித், சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்தது கூட விவாதங்களை கிளப்பியது.
இதற்கிடையே, பல ஆண்டுகளாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் அஜித் – பாலா மோதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவிருந்தார். அந்த கதாபாத்திரத்துக்காக நீண்ட முடியையும் வளர்த்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அஜித் அந்தப் படத்திலிருந்து விலக, பின்னர் அந்த வேடத்தில் ஆர்யா நடித்தார். இந்த காலகட்டத்தில் அஜித்துக்கும் பாலாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பாலா அஜித்தை தாக்கியதாகவும் பல வருடங்களாக வதந்திகள் சுற்றி வந்தன.
இந்த நிலையில், அந்த சம்பவத்தின் போது நேரில் இருந்த தயாரிப்பாளர் எல்.சுரேஷ், சமீபத்திய பேட்டியில் உண்மையை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில்,“நான் கடவுள் படத்தின் போது அஜித்துக்கும் பாலாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது உண்மைதான். ஒரு அறையில் இருவரும் பேசினார்கள். தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்ற முறையில் நானும் அங்கே இருந்தேன். பாலா, இன்னும் சில மாதங்கள் காத்திருக்குமாறு கேட்டார். அதில்தான் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகே அஜித் அந்தப் படத்திலிருந்து விலகினார். இதைத் தவிர, அஜித்தை பாலா அடித்தார் என்றெல்லாம் சொல்வது முற்றிலும் பொய்,” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பல ஆண்டுகளாக ஓடிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Ajith Bala clash This is what happened to Bala and AK in that room Producer L Suresh breaks the truth