குல் பிளாசாவில் கருப்பு இரவு…வணிக வளாகம் மரணக் கூடம் ஆனது…! - தீ விபத்தில் 61 உயிர்கள்பலி...!
Black night Gul Plaza shopping complex became death trap 61 lives lost fire accident
பாகிஸ்தானின் கராச்சி மாநகரின் பரபரப்பான எம்.ஏ. ஜின்னா சாலையில் அமைந்துள்ள ‘குல் பிளாசா’ எனப்படும் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீ விபத்து வெடித்தது. மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் நிறைந்த இந்த வணிக வளாகத்தின் மூன்று தளங்களிலும் மளமளவென தீ பரவி, முழுக் கட்டிடத்தையும் கரும்புகை சூழ்ந்தது.
இந்த கொடூர தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கராச்சி தெற்கு மண்டல காவல் துறை துணை ஆணையர் சையது ஆசாத் ரசா தெரிவித்ததாவது, “துபாய் கிராக்கரி” என்ற கடையில் மட்டும் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால், இந்த பகுதியில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.ஒட்டுமொத்தமாக தற்போது வரை பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறுதியான பலி விவரங்கள் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்றும், அதிலிருந்து தீ வேகமாக அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியதாகவும் தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு செயலிழப்பு குழுவின் ஆய்வில், வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை உறுதி செய்துள்ளது.சம்பவம் நிகழ்ந்த உடனே, 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
கடும் போராட்டத்துக்குப் பிறகு ஞாயிறு இரவு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பிடித்து எழுந்த அடர்ந்த கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.புகை மூட்டம் கடுமையாக இருந்ததால், மீட்பு குழுவினர் உடனடியாக உள்ளே நுழைய முடியாமல் திணறினர்.
தீ முழுமையாக அணைந்த பிறகே உள்ளே சென்று பார்த்தபோது, பலர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மூன்று தளங்களிலும் சேர்த்து மொத்தம் 1,200 கடைகள் இயங்கி வந்த இந்த வணிக வளாகத்தில், விடுமுறை நாள் என்பதால் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுவே இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Black night Gul Plaza shopping complex became death trap 61 lives lost fire accident