'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Stalin with you camp Important announcement for the people of Chennai
சென்னையில் நாளை 12 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அரசுத் துறைகளின் சேவைகளை, இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் ஜூலை 15ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்த திட்ட முகாம், எந்தெந்த பகுதிகளில் என்று நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள வசதியாக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒவ்வொரு நாளும், அந்தந்த தேதிகளில் நடைபெறும் முகாம்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த முகாமில்,நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீா்வு அளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.திருவொற்றியூர் மண்டலம் வார்டு-11ல் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, மாதவரம் மண்டலம், வார்டு-26ல் மாதவரம் பால் காலனியில் உள்ள தனுவாஸ் மினி ஹால், தண்டையார்பேட்டை மண்டலம் , வார்டு-48ல் பார்த்தசாரதி தெருவில் உள்ள பாண்டியன் திரையரங்கம், இராயபுரம் மண்டலம், வார்டு-60ல் ஜார்ஜ் டவுன், அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளி, திரு.வி.க. நகர் மண்டலம் வார்டு-75ல் ஓட்டேரி இணைப்பு சாலையில் உள்ள மூலிகை பூங்கா மைதானம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-93ல் முகப்பேர், நந்திலி லட்சுமணன் தெருவில் உள்ள ஏ.எஸ்.என். மஹால், அண்ணாநகர் மண்டலம், வார்டு-98ல் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரன் கார்டன் 6வது தெருவில் உள்ள வார்டு அலுவலகம், தேனாம்பேட்டை மண்டலம் , வார்டு-119ல் இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள நல்வாழ்வு திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் வார்டு-128ல் விருகம்பாக்கம், காமராஜ் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-149ல் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் , வார்டு-166ல் நங்கநல்லூர், விஸ்வநாதன்புரம் பிரதான சாலை, கனகாம்பாள் காலனியில் உள்ள கே.சி.டி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு-200ல் செம்மஞ்சேரி, பழத்தோட்ட சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Stalin with you camp Important announcement for the people of Chennai