ஈரான் போரின் எதிரொலி; ஹீலியம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள சீனா; 'சிப்' துறைக்கு பேரிடி; மின்னணு சாதனங்களின் விலை உயரும் அபாயம்..!
China bans helium exports in response to Iran war causing disaster for chip industry
அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் உலகளவில் வர்த்தகம் மற்றும் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் Helium வாயுவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிப் (chip) தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான ஹீலியம் ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்வதாகச் சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகச் சட்ட விதிகளின்படி, ஹீலியம் மீதான ஏற்றுமதித் தடையை உடனடியாக அமல்படுத்துவதாகச் சீனாவின் வர்த்தக அமைச்சகம் மற்றும் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

Trivium China என ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, சீனா தனக்குத் தேவையான ஹீலியத்தில் சுமார் 15% அல்லது அதற்கும் குறைவான அளவையே உற்பத்தி செய்கிறது; மீதமுள்ள பெரும்பகுதியை கத்தார் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கத்தார் உலகின் மொத்த ஹீலியம் விநியோகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கத்தாரில் ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சீனாவுக்கு வரும் வரத்து 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹீலியத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு மறுஏற்றுமதி (Re-export) செய்யும் முக்கிய இடைத்தரகராகச் சீன நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய சீனாவின் தடை உத்தரவு ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய சிப் தயாரிப்பு நிறுவனங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் போர் காரணமாக உலக அளவில் ஹீலியம் விநியோகம் மிகவும் பற்றாக்குறையாக மாறியுள்ள நிலையில், தனது தொழில்துறைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகின்றதால் இந்தத் தடையை சீனா அறிவித்துள்ளது.
ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால், கணினி மற்றும் லேப்டாப் சிப் உற்பத்தி குறைவடைவதோடு, ஸ்மார்ட்போன், டேப்லெட் உற்பத்திகளும் தாமதமாகும். அத்துடன், AI சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான சிப்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் . குறிப்பாக கார், மின்சார வாகனங்களின் (EV) மின்னணு கூறுகள் பாதிக்கப்படும். CPU போன்றவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்படும். உலகளவில் சிப் விலை உயர்ந்து, மின்னணு சாதனங்களின் விலையும் அதிகரிக்கும்.
English Summary
China bans helium exports in response to Iran war causing disaster for chip industry