அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கே: எச்-1பி விசாவை முடக்கிய டெக்சாஸ் அரசு...!
American jobs for Americans Texas government suspended H1B visa
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கைகளில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் எச்-1பி விசா கட்டணம் ஒரே அடியாக 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டு, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எச்-1பி விசா காரணமாக அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பின்னணியில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிரடித் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் கவர்னர் கிரெக் அபோட், டெக்சாஸில் செயல்படும் அனைத்து அரசு அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் புதிய எச்-1பி விசா விண்ணப்பங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
. இது தொடர்பாக அவர் மாகாண முகமை தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், எச்-1பி விசா திட்டத்தில் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.“அமெரிக்க வேலைகள் அமெரிக்க தொழிலாளர்களுக்கே கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். கூட்டாட்சி அரசு எச்-1பி விசா திட்டத்தை மறுஆய்வு செய்து வரும் நிலையில், அனைத்து மாகாண முகமைகளும் புதிய எச்-1பி விசா மனுக்களை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
டெக்சாஸ் பணியாளர் ஆணையத்தின் எழுத்துப்பூர்வ அனுமதி அவசியமான சில விதிவிலக்குகளைத் தவிர, இந்தத் தடை அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் மார்ச் 27-ம் தேதிக்குள் எச்-1பி விசா தொடர்பான விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அனைத்து முகமைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கவர்னர் கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது, “டெக்சாஸ் வரி செலுத்துவோர், எங்கள் பணியாளர்களை உருவாக்க பில்லியன் கணக்கில் முதலீடு செய்கிறார்கள்.
அந்த வேலைகள் டெக்சாஸ் மக்களுக்கே செல்ல வேண்டும்” என்றார்.எச்-1பி விசா மீது இவ்வாறு முழுமையான தடை விதித்த முதல் அமெரிக்க மாகாணம் டெக்சாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
American jobs for Americans Texas government suspended H1B visa