‘டோரதி’ படத்தை பார்த்து நெகிழ்ந்த மிஷ்கின்.. கார்த்திக் சுப்புராஜை உச்சிமுகர்ந்து பாராட்டு! - Seithipunal
Seithipunal


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டோரதி’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் மிஷ்கின், படக்குழுவினரையும் குறிப்பாக கார்த்திக் சுப்புராஜையும் வெகுவாக பாராட்டியுள்ளார். ‘டோரதி’ திரைப்படம் தனது மனதைத் தொட்டுவிட்டதாகக் கூறியுள்ள மிஷ்கின், இந்திய திரைப்பட வரலாற்றில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் இடம்பெறும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளை மகளுடன் கொண்டாடுவதற்காக கனடா சென்றிருந்ததாகவும், அங்கு தனது மகளுடன் ‘டோரதி’ திரைப்படத்தை பார்த்ததாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், வெறும் பொழுதுபோக்கிற்காக திரையரங்கில் சென்று பார்த்துவிட்டு கடந்து செல்லக்கூடிய திரைப்படம் இது அல்ல என்றும், படத்தில் பேசப்பட்டுள்ள விஷயங்களை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் எதிராக நிலவும் பார்வை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை இப்படம் வெளிப்படுத்துவதாக மிஷ்கின் கூறியுள்ளார். திருநங்கைகளை மனிதர்களாக பார்க்காமல் இழிவாக பார்க்கும் மனநிலையை படம் கேள்விக்குள்ளாக்குவதாகவும், பெண்களை மதம், சாதி மற்றும் ஆணாதிக்கத்தின் பெயரில் ஒடுக்கி வந்த விதம் குறித்தும் ‘டோரதி’ சிந்திக்க வைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தையும் மிஷ்கின் வெகுவாக பாராட்டியுள்ளார். தான் ஒரு காட்சியை உருவாக்க எவ்வளவு சிரமப்பட்டு உழைப்பேனோ, அதைவிட நூறு மடங்கு அதிகமாக கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்திற்காக உழைத்திருப்பதாகவும், ஒவ்வொரு காட்சியையும் அவர் அழகாக காட்சிப்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “இதில் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கவிதை” என்று குறிப்பிட்ட மிஷ்கின், ஒரு கல் போன்ற சிறிய விஷயத்தைக்கூட திரையில் காட்டும்போது, அதனுடன் இணைந்த நிலப்பரப்பையும் மனிதர்களையும் கார்த்திக் சுப்புராஜ் அழகாக காட்சிப்படுத்தியுள்ளதாக பாராட்டியுள்ளார். ‘டோரதி’ மிகச்சிறந்த கலைப்படைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் பார்வையாளர்களின் மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும், தர்மம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால் அதன் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். இந்திய திரைப்பட வரலாற்றில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக ‘டோரதி’ நிச்சயம் இடம்பெறும் என்றும், தலைமேல் வைத்து கொண்டாட வேண்டிய முக்கியமான மென்மையான கலைப்படைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையில் தான் காலை தொட்டு முத்தமிட்ட மனிதர்களில் இசைஞானி இளையராஜாவும் ஒருவர் என்று கூறிய மிஷ்கின், தனது அம்மாவின் காலைக்கூட தான் தொட்டு முத்தமிட்டதில்லை என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இளையராஜாவுக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலைத்தான் தொட்டு முத்தமிட வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. மிஷ்கினின் பாராட்டு வீடியோவும் அவரது கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysskin moved by the film Dorothy showers praise on Karthik Subbaraj


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->