''காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விஷயம்.'' இயக்குநர் பாலாஜி மோகன்..!
Director Balaji Mohan says that love is something no one in the world can fully understand
அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ள வெப் தொடர் ‘லவ்’. இந்த தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். அக்.2-ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் இந்த வெப் தொடருக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த், ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் உள்பட படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் பாலாஜி மோகன் பேசும்போது கூறியதாவது, ''காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன்.
ஆண்கள், பெண்களைப் பற்றியும், பெண்கள், ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனக்கும் காதலைப் பற்றி முழுமையாகத் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே தானும் அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்என்றும், அதனால்தான் காதல் கதைகளைத் தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் சுட்டிக்காடடி பேசியுள்ளார்.
மேலும், முடிந்தவரை தன்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிற வகையிலும் உருவாக்க முயல்கிறதாகவும் கூறியுள்ளார்.
அதேமாதிரிதான் ‘லவ்’ தொடரையும் அப்படித்தான் உருவாக்கியுள்ளதாகவும், காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்துள்ளோம் என்றும் இயக்குநர் பாலாஜி மோகன் பேசியுள்ளார்.
English Summary
Director Balaji Mohan says that love is something no one in the world can fully understand