செப்.30-இல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்கள்..!
Five districts in Tamil Nadu issued a heavy rain warning for September 30
தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 05 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் கடந்த 26-ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை வழுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வழுவிழக்ககூடும்.
மழை நிலவரம்:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 09 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
28-ஆம் தேதி
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
29-ஆம் தேதி
ஈரோடு, நாமக்கல், மதுரை ஆகிய 03 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 16 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
30-ஆம் தேதி
நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 05 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.1-ந் தேதி
நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்.2, 3 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.'' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Five districts in Tamil Nadu issued a heavy rain warning for September 30