“ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி!” – மதுராந்தகம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Om Kali Jai Kali TVK is a renegade Udhayanidhi Stalin scathing criticism during the Madhuranthakam campaign
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்தார். “ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி” என முழக்கமிட்ட அவர், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் தவெக ஆட்சி அமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், உதயநிதியின் பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டார். கரூரில் பிரச்சாரத்திற்காக விஜய் தாமதமாக சென்றதாகவும், கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததாகவும் கூறிய அவர், இந்த சம்பவத்துக்குப் பிறகு விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என விமர்சித்தார்.
மேலும், திருச்சியில் இருந்து சென்னை சென்றதாகவும், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து விஜய்யை கடுமையாக விமர்சித்த அவர், “ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி” என முழக்கமிட்டார்.
தொடர்ந்து இடைத்தேர்தல் குறித்து பேசிய உதயநிதி, மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நடைபெறுவது இயற்கையாக உருவான இடைத்தேர்தல் அல்ல என்றும், ஆளும் கட்சியில் இணைவதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாலேயே தேர்தல் வந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், திமுக கூட்டணிக் கட்சிகளை அணுகுவதற்காக விஜய் தரப்பு சோபா அனுப்பியதாகவும், அதிமுகவை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தவெக தரப்பினர் பொய்யான தகவல்களை பரப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்களை தவெக தரப்பு புதிய முறையில் தங்கள் பக்கம் அழைத்துச் சென்றதாக விமர்சித்த உதயநிதி, சில எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாகக் கூறினார். “எவ்வளவு திமிர் இருந்தால், அவர்கள் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள்?” என மதுராந்தகம் தொகுதி மக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெக வேட்பாளர்களுக்கு எதிராக தொகுதி மக்களிடையே எதிர்ப்பு உருவாகி வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுராந்தகம் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தவெக, அதிமுக மற்றும் திமுக இடையேயான பிரச்சார மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
English Summary
Om Kali Jai Kali TVK is a renegade Udhayanidhi Stalin scathing criticism during the Madhuranthakam campaign