திமுக வெற்றி பெற்றுவிட்டால் ராஜினாமா செய்யுறேன்! ராஜினாமா செய்ய உதயநிதி தயாரா? சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு நேரடியாக சவால் விடுத்துப் பேசியுள்ளார். மதுராந்தகத்தில் தவெகவை விட திமுக வேட்பாளர் ஒரு வாக்கு கூடுதலாக பெற்றாலும், தனது கட்சிப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆதவ் அர்ஜுனா, திமுக தலைமை மற்றும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி கூறுவதாகவும், ஆனால் தற்போது திமுகவை அழிக்க வந்தவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் விமர்சித்தார். 1967ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிக்கு வந்ததாகவும், அதன்பின்னர் கருணாநிதி குடும்ப ஆட்சியை கொண்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனை பெரிய மன்னனாக்க வேண்டும் என்ற கனவில் இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.

தேர்தல் என்பது ஒரு யுத்தம் போன்றது என்றும், அந்த யுத்தக் களத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வருகிறது என்றும் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு அவர் பேசினார். மன்னராட்சியை ஒழிப்பதற்காக ஒரு மக்கள் தலைவர் வந்துள்ளதாகவும், அது முதலமைச்சர் விஜய் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா, “மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுவிட்டால் தவெக பொதுச்செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். மதுராந்தகத்தில் தவெகவை விட திமுக ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கி காட்டுங்கள். அப்படி நடந்தால் நான் பதவியில் இருக்க மாட்டேன்” எனக் கூறினார்.

மேலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையையும் பிரச்சாரத்திற்கு அழைத்து வரலாம் என்றும், திமுக தோல்வியடைந்தால் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சிப் பதவியிலிருந்து விலகத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். “நாங்கள் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 ஆண்டுகள் பழமையான கட்சி” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மதுராந்தகத்தில் திமுகவை விட தவெக ஒரு வாக்கு கூடுதலாக பெற வேண்டும் என்ற இலக்குடன் தவெக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த சவால் தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A vote count challenge in Maduranthakam I will resign if TVK does not secure even one vote more than the DMK Aadhav Arjuna


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->