ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ்-க்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை; முதல்வர் விஜய் அறிவிப்பு..!
CM Vijay announces a cash incentive of Rs 30 lakh for Asian Games bronze medalist Vithya Ramraj
ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றதோடு, மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், பிடி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், வித்யா ராம்ராஜ்-க்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளதோடு வித்யா தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
''ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை திருமதி பி.டி. உஷா அவர்கள் 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CM Vijay announces a cash incentive of Rs 30 lakh for Asian Games bronze medalist Vithya Ramraj