வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்; வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.களான 43 பேர் மீது கொலை குற்றச்சாட்டு; 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவை...!
43 MPs who won the Bangladesh elections face murder charges
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்தது. இந்நிலையில் கடந்த வாரம் அந்நாட்டின் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் பொது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் உள்ள 297 இடங்களில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியான பிஎன்பி, 212 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

எதிர்த்து போட்டியிட்ட ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆகியுள்ளது. 79 சிறுபான்மையின வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 04 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் 43 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதோடு, 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற பகீர் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், கடந்த காலங்களில், 185 எம்பிக்கள் வழக்குகளை சந்தித்தவர்கள் எனவும், 95 எம்பிக்கள் மீது கடந்த காலத்திலும் தற்போதும் வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிஎன்பி கட்சியின் எம்பிக்களில் 50.24% பேர் மீது வழக்குகள் உள்ளன. அத்தோடு, இரண்டாவது பெரிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்பிக்கள் 47.07% மீது வழக்குகள் உள்ளன.
இந்த எம்பிக்கள் பட்டியலில், 182 பேர் தொழிலதிபர்கள். அடுத்தபடியாக 36 பேர் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் 22 பேர், விவசாயிகள் 13 பேர் உள்ளனர். ஆனால், வெறும் 08 பேர் மட்டுமே அரசியலைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். அதேநேரம், இந்த 297 எம்பிக்களில் 271 பேர் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
43 MPs who won the Bangladesh elections face murder charges