பல மாத போராட்டம் முடிந்தது.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்!ரன்னிங் டைம், ரிலீஸ் தேதி என்ன? - Seithipunal
Seithipunal


நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு பல மாத தாமதத்திற்குப் பிறகு சென்சார் போர்டு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெங்கட் கே.நாராயணா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதலில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என கூறப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் வழங்குவது தாமதமானது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது. அங்கு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது.

இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தையும் நாடியது. இப்படி சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் பல மாதங்களாக சட்டப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஒருவழியாக ‘A’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்சார் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் உருவாகியுள்ளது.

இதற்கிடையே சென்சார் சிக்கல் நீடித்துக் கொண்டிருந்தபோது, ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், கசிந்த காட்சிகளை யாரும் பார்க்கவோ, பகிரவோ வேண்டாம் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தது. சட்டவிரோதமாக படத்தின் காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

சென்சார் சிக்கல், நீதிமன்ற வழக்குகள், ரிலீஸ் தாமதம் மற்றும் ஆன்லைன் காட்சிகள் கசிவு என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்திருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியலில் முழுமையாக களமிறங்கி தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது சென்சார் சிக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A months long struggle has ended Vijay film Jananayagan receives an A certificate What are the runtime and release date


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->