எடப்பாடியை மாற்ற அதிமுகவில் ரகசிய கையெழுத்து வேட்டை! சைலண்டாய் வேலை பார்த்த சிவி சண்முகம்.. வேலையை ஆரம்பித்த வேலுமணி! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் பணிகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், கட்சிக்குள் சத்தமில்லாமல் மற்றொரு அதிரடி நகர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபுறம் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். மறுபுறம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுகவுக்குள் மிக ரகசியமாக சில முக்கிய வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த நகர்வுகள் குறித்த தகவல்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தெரியாமல் இருக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்த நிலையில், முக்கிய மெசேஜ் ஒன்று லீக்கானதால் ஒட்டுமொத்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்திகளில் ஒன்றாக அதிமுக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம், இரட்டை இலை என்ற வலிமையான சின்னம், தமிழகம் முழுவதும் பரவியுள்ள கட்சி கட்டமைப்பு என அதிமுகவுக்கு மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது.

தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்த கட்சிகளில் ஒன்றாகவும், ஆட்சியில் இல்லாதபோது வலுவான எதிர்க்கட்சியாகவும் அதிமுக செயல்பட்டு வந்தது.ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த நிலைமை படிப்படியாக மாறியது.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு அதிகாரப் போட்டிகளால் பல அணிகளாக சிதறியது.

தனக்குப் பிறகு கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்ற அரசியல் வாரிசை ஜெயலலிதா வெளிப்படையாக அறிவிக்காததும், தற்போதைய குழப்பங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.இதனால் கட்சியின் வாக்கு வங்கியும், அமைப்பு பலமும் பல இடங்களில் சிதறியது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் முக்கிய முகங்கள் பலர் அடுத்தடுத்து அதிமுகவை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்குடன் இருந்த பல நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், கடம்பூர் ராஜு என பல முக்கிய தலைவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறியிருப்பது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.அதிமுகவில் இருந்து வெளியேறிய தலைவர்கள் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி மீதே நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

கூட்டணி அமைப்பது முதல் வேட்பாளர் தேர்வு வரை எந்த முக்கிய முடிவிலும் மூத்த நிர்வாகிகளின் கருத்தை எடப்பாடி பழனிசாமி கேட்பதில்லை என்றும், அனைத்து முடிவுகளையும் அவரே தனிப்பட்ட முறையில் எடுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்த அணுகுமுறையே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கட்சிக்குள் அதிருப்தியில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.இருவரும் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், இதுவரை அதிமுகவை விட்டு வெளியேறவில்லை.

அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.இதற்குப் பின்னால் ஒரு முக்கிய அரசியல் கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை கட்சியில் இருந்து நீக்கினால், அவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் உடனடியாக தமிழக வெற்றிக் கழகம் அல்லது வேறு அரசியல் அணிக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும்.

அப்படி நடந்தால் அவர்களுடன் மேலும் பல மாவட்ட நிர்வாகிகளும் வெளியேறக்கூடும் என்பதால், இருவரின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி இதுவரை பறிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில், சி.வி.சண்முகமும் எஸ்.பி.வேலுமணியும் கட்சியை விட்டு வெளியேறாமல் அதிமுகவுக்குள்ளேயே தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த நகர்வுதான் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோரிடம் சி.வி.சண்முகம் தரப்பு கையெழுத்து பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சென்ற பிறகே சில மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதோடு இந்த முயற்சி முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.மாவட்டச் செயலாளர்களை மட்டும் நம்பாமல், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கையில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் ரகசியமாக கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் திட்டம் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.அதாவது, விரைவில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்பதே முதல் திட்டமாம்.

அந்த பொதுக்குழுவில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றால், அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காகவே பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் வகையில் ரகசிய கையெழுத்து வேட்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மிகுந்த ரகசியத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

யாரிடம் பேச வேண்டும், யாரிடம் கையெழுத்து பெற வேண்டும், எந்த தகவலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு செல்லக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இந்த ரகசிய நகர்வுகள் தொடர்பான முக்கிய மெசேஜ் ஒன்று எதிர்பாராத விதமாக லீக்காகிவிட்டதாம்.

அந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக உள்ள சில நிர்வாகிகளின் கைகளுக்கு சென்றதாகவும், அவர்கள் உடனடியாக அதிமுக தலைமையிடம் விவரங்களை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது யார் யாரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது? எத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்? மாவட்டச் செயலாளர்களில் எத்தனை பேர் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக உள்ளனர்? என்பது குறித்து ரகசியமாக கணக்கெடுக்கும் பணியில் எடப்பாடி தரப்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபுறம் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல மாவட்ட வாரியாக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார்.

மறுபுறம், அதே கட்சிக்குள் அவருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் முயற்சி நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிமுகவில் புதிய அரசியல் புயலை கிளப்பியுள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்பின் உண்மையான நோக்கமா?அல்லது எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அகற்றுவதற்கான மிகப்பெரிய ஆபரேஷன் தொடங்கிவிட்டதா?

ரகசிய கையெழுத்து வேட்டை குறித்த தகவல் முழுமையாக வெளிவந்தால் அதிமுகவில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அரசியல் அதிர்வுகள் ஏற்படலாம் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A secret signature drive within the AIADMK to replace Edappadi CV Shanmugam worked quietly while Velumani has now set the plan in motion


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->