விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் சமீபகால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜயிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் விசிக இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவுடனான நட்பு தொடர்வதாக திருமாவளவன் பேசியிருப்பது தவெக தலைமைக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம்தான் தற்போது தவெகவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, “ஆட்சியிலும் பங்கு... திமுகவுடனும் நட்பு” என்ற திருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் ரசிக்கவில்லை என்றும், இது தொடர்பாக விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தவெக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அண்மைக்காலமாக பாமகவுடன் தவெக கொஞ்சம் நெருக்கம் காட்டுவதற்கும் திருமாவளவன் மீதான இந்த அதிருப்தியே ஒரு காரணமாக இருக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் கூட்டணி கணக்குகள் முற்றிலும் மாறியுள்ளன.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய விசிக, விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தது. அதோடு மட்டுமின்றி, தவெக தலைமையிலான ஆட்சியிலும் விசிக பங்கு பெற்றுள்ளது.
இதனால் விசிக, தவெக தலைமையிலான புதிய அரசியல் அணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாகவே பார்க்கப்பட்டது.முதலமைச்சர் விஜயும், தற்போதைய கூட்டணி ஆட்சியை ஒரு வலுவான அரசியல் கூட்டணியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் அண்மையில் நடத்தி முடித்துள்ளார்.அடுத்த கூட்டத்தை தென் தமிழகத்தில் நடத்தலாமா என்பது குறித்தும் தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளர்களுடன் விஜய் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அடுத்த கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தலாம் என்று விஜய்க்கு அவரது ஆலோசகர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்தான் திருமாவளவனின் சமீபத்திய கருத்துகள் தவெக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றிருப்பதால் மட்டுமே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடனான நட்பு இன்னும் தொடர்வதாகவும் திருமாவளவன் கூறியிருந்தார்.இந்த கருத்து தவெக மட்டுமின்றி, விஜய் அரசை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் ஒரு அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுக்கொண்டு, பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடனும் நட்பு தொடர்வதாக கூறுவது என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாடு என்ற கேள்வி தவெக தரப்பில் எழுந்துள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சர் விஜயின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தனது நெருங்கிய ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் ஜெகதீஷ் ஆகியோரிடம் திருமாவளவனின் சமீபத்திய பேச்சுகள் குறித்து விஜய் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
“திருமாவளவனின் சமீபகால பேச்சுகள் சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சொன்னதால்தான் அவரின் ஆதரவைக் கேட்க சம்மதித்தேன். ஆனால் நமது ஆட்சியில் இருப்பார்கள், அதேநேரத்தில் திமுகவுடனும் நட்பாக இருக்கிறோம் என்று சொல்வது என்ன மாதிரியான அரசியல்? இதனால் அவர் மீதான நம்பகத்தன்மை குறைகிறது” என்று விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கூட்டணியில் இருந்து கொண்டே தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்று ஏற்கனவே விசிக தரப்புக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
“ஆதரவை வாபஸ் பெற விரும்பினால் வெளியேறலாம். ஆனால் அரசுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை பொதுவெளியில் பேசுவது ஏன்?” என்றும் விஜய் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் இந்த அதிருப்தியை அவரது ஆலோசகர்களும் ஆமோதித்ததாக கூறப்படுகிறது.
திருமாவளவனின் சமீபகால பேச்சுகளும் அரசியல் அணுகுமுறையும் கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவதாக அவர்கள் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, ஒரு கட்சியின் பிரதிநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் எதிர்க்கட்சியுடனும் அரசியல் நட்பு தொடர்வதாக கூறுவது சந்தேகங்களை ஏற்படுத்தும் என்று விஜயிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அரசு தொடர்பான முக்கிய தகவல்கள் எதிர்க்கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் அச்சம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“ஆட்சியில் பங்கு பெற்றுக்கொண்டே அரசியலில் இரட்டை சவாரி செய்வதை ஏற்க முடியாது. இந்த நிலைப்பாட்டை ஆதவ் அர்ஜுனா மூலம் மீண்டும் திருமாவளவனிடம் தெளிவாக எடுத்துச் சொல்லலாம்” என்று ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் விஜயிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்தே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முதலமைச்சர் விஜய் முக்கிய அசைன்மென்ட் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமாவளவனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் தனது அதிருப்தியை ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்ததாகவும், விசிக தலைவரிடம் சொல்ல வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்தும் அறிவுறுத்தியதாகவும் தவெக உள்வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் விரைவில் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனை நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில், தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் விசிக தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, அமைச்சரவையில் தொடர்ந்துகொண்டே திமுகவுடனான அரசியல் உறவை முன்னிறுத்துவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தவெக தரப்பில் நேரடியாக தெரிவிக்கப்படலாம்.
இந்த விவகாரத்தின் பின்னணியில்தான் அண்மைக்காலமாக பாமகவுடன் தவெக நெருக்கம் காட்டுவதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விசிகவின் நிலைப்பாடு தொடர்ந்து குழப்பமாக இருந்தால், மாற்று அரசியல் சமநிலையை உருவாக்கும் வகையில் பாமகவுடன் உறவை வலுப்படுத்தலாம் என்ற யோசனையும் தவெக வட்டாரங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
திருமாவளவனின் சமீபகால பேச்சுகள் ஒரு சாதாரண அரசியல் கருத்தாக மட்டும் இல்லாமல், தவெக கூட்டணியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய விவகாரமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒருபுறம் திமுகவுடனான பழைய நட்பை முழுமையாக முறித்துக்கொள்ள விரும்பாத திருமாவளவன்; மறுபுறம் தனது தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தெளிவான அரசியல் நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று விரும்பும் விஜய் என இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக தெரிகிறது.
ஆதவ் அர்ஜுனா - திருமாவளவன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்குமா?அல்லது “அமைச்சரவையிலும் பங்கு... திமுகவுடனும் நட்பு” என்ற திருமாவளவனின் நிலைப்பாடு தவெக கூட்டணிக்குள் மிகப்பெரிய விரிசலை உருவாக்குமா?இதுதான் தற்போது தவெக மற்றும் விசிக வட்டாரங்களில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.