சொந்த மண்ணுக்கு திரும்பிய சாமி...! ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டின் 3 பழமையான சிலைகள்...!
3 ancient statues Tamil Nadu recovered from Australia
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 6 அரிய சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவற்றில் 3 சிலைகளை திருப்பி ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகம் திரும்பவுள்ள சிலைகளில், திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான திரிசூலபத்திரகாளி அம்மன் சிலையும் இடம்பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சிலை திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே கோவிலுக்கு சொந்தமான நந்தி சிலையும் மீட்கப்பட்டுள்ள முக்கிய சிலைகளில் ஒன்றாகும்.மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள நாகநாதசாமி கோவிலுக்கு சொந்தமான ஆறு முகங்கள் கொண்ட சுப்பிரமணிய சுவாமி சிலையும் ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி வழங்கப்பட உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த 3 அரிய சிலைகளையும் ஆஸ்திரேலிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க உள்ளது.
அதன்பிறகு, மத்திய அரசின் ஒருங்கிணைப்புடன் சிலைகள் டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் பாதுகாப்பாக தமிழகம் கொண்டு வந்து, சம்பந்தப்பட்ட கோவில்களிடம் மீண்டும் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவிலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தொன்மையான சிலைகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
3 ancient statues Tamil Nadu recovered from Australia