காவலராக இருந்து ரவுடியாக மாறிய வாலிபர்...! கோவையில் காங்கிரஸ் பிரமுகர் கடத்தல் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்...!
young man who went from being policeman rowdy shocking twist kidnapping case Congress leader Coimbatore
கோவையில் காங்கிரஸ் பிரமுகர் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கடத்தல் கும்பலுக்கு முன்னாள் காவலர் ஒருவரே தலைமை தாங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படை காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த தனசேகர் (53), காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். கடந்த 5-ந்தேதி, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று, ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பாலக்காடு சாலையில் அவரை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதன் அடிப்படையில், திருச்சியைச் சேர்ந்த வைரபெருமாள் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள இடிகரையைச் சேர்ந்த முன்னாள் காவலர் கார்த்தி, திருச்சியைச் சேர்ந்த அன்பு, மூர்த்தி உள்ளிட்ட 5 பேரை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விசாரணையில், முன்னாள் காவலரான கார்த்திதான் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவராக செயல்பட்டதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், ஆள் மாறாட்டம் காரணமாக தனசேகர் தவறுதலாக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரை முன்கூட்டியே திட்டமிட்டு குறிவைத்து கடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரை பாலக்காடு சாலையில் இறக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. தலைமறைவாக இருக்கும் கார்த்தி கைது செய்யப்பட்ட பிறகே இந்த வழக்கின் முழு பின்னணி வெளிச்சத்திற்கு வரும் என்று விசாரணை வட்டாரங்கள் கருதுகின்றன.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாவது,"கோவை அருகே உள்ள இடிகரையைச் சேர்ந்த கார்த்தி, கடந்த 2003-ஆம் ஆண்டு பட்டாலியன் பிரிவில் காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், இளம்பெண் ஒருவருடன் பழகி பணம் பறித்ததாக புகார் எழுந்ததுடன், மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் அவர் மீது பதிவாகின.
இதையடுத்து, கடந்த 2006-ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்தார்.அதன்பிறகு குற்றப் பின்னணி கொண்ட நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட அவர், போத்தனூரில் பதிவான கொலை வழக்கு உள்பட காட்டூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பதிவான மொத்தம் 7 வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடமானமாக பெற்ற கார்களை உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் விற்பனை செய்தல், வாகனத் திருட்டு, சிறையில் இருந்து வெளியே வரும் பிரபல ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுதல் போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் அடமானம் தொடர்பாக ஏற்பட்ட பணப் பிரச்சினையே காங்கிரஸ் பிரமுகர் தனசேகரை கடத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள முன்னாள் காவலர் கார்த்தி கைது செய்யப்பட்டால் மட்டுமே இந்த வழக்கின் முழு உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரையும் விரைவில் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
young man who went from being policeman rowdy shocking twist kidnapping case Congress leader Coimbatore