சவால்களை எதிர்கொண்டு வரும் உயர்கல்வித் துறையை மீட்டெடுக்க அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்...! - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்...!
minister should focus restoring higher education sector which facing challenges Tamil Nadu BJP President Nayanar Nagendran insists
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாகவும், உயர்கல்வித் துறையின் செயல்பாடுகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது,"தமிழகத்தில் செயல்பட்டு வரும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை, ஆளும் த.வெ.க. அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதனும் மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுக வேண்டும்.

முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு கல்லூரிகள் போதிய கவனம் பெறாததன் விளைவாகவே, இந்த ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக சரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரு காலத்தில் அரசு கல்லூரியில் இடம் கிடைப்பது மாணவர்களின் மிகப்பெரிய சாதனையாகவும், அவர்களின் எதிர்கால வெற்றிக்கான வலுவான அடித்தளமாகவும் கருதப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தகுதியான பேராசிரியர்கள் பற்றாக்குறை, நிரந்தர முதல்வர்கள் இல்லாமை, தரமான கட்டிட வசதிகள் குறைபாடு, நவீன ஆய்வகங்கள் இல்லாமை, போதிய கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாததால், அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்களையே மாணவர்களும், பெற்றோர்களும் அதிகம் விரும்பும் நிலை உருவாகியுள்ளது. இது அரசு கல்வி அமைப்பின் செயல்திறனுக்கே பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சவால்களை எதிர்கொண்டு வரும் உயர்கல்வித் துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
minister should focus restoring higher education sector which facing challenges Tamil Nadu BJP President Nayanar Nagendran insists