குடை எடுத்துட்டு கிளம்புங்க...! 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு...!
Take an umbrella and go Heavy rain likely 7 districts today Important announcement by Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, கடலோர கர்நாடக பகுதிகளிலிருந்து கடலோர ஆந்திரப் பகுதிகள் வரை சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 4.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வு நீட்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
இன்றைய வானிலை நிலவரம் (08-06-2026)
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை முன்னறிவிப்பு (09-06-2026)
தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில், திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் நிலவுகிறது.
ஜூன் 10-ஆம் தேதிக்கான முன்னறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடரும். குறிப்பாக திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பநிலை நிலவரம்:
ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது. இருப்பினும் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும்.ஜூன் 10 முதல் 12-ஆம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக குறையும் என்றும், பெரும்பாலான இடங்களில் இயல்பான அளவை ஒட்டியே நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.மேலும், வட கடலோர தமிழகம் மற்றும் வட உள் மாவட்டங்களில் அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதமும் நிலவுவதால், பொதுமக்களுக்கு வெப்பம் சார்ந்த அசௌகரிய உணர்வு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு
இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவிலும் பதிவாகக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் சார்ந்த அசௌகரியம் தொடரும் சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Take an umbrella and go Heavy rain likely 7 districts today Important announcement by Meteorological Department