21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரலாற்று சாதனை; உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அசத்திய அனஹத் சிங்; பிரதமர் பாராட்டு..!
PM congratulates Anahat Singh for winning the World Junior Squash Championship title
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனஹத் சிங் பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஆன்டாரியோவில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் எகிப்தின் ருகையா சலீம் உடன் அனஹத் சிங் பலப்பரீட்சை நடத்தினார்.
இந்த மோதலில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் போட்டியில் 21 வருடங்களுக்குப் பிறகு கால்பதித்த இந்தியர் என்ற சாதனையை அனஹத் சிங் படைத்துள்ளார். கடைசியாக 2005-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். தற்போது உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அனஹத் சிங் படைத்துள்ளார்.
கடந்த 2011 முதல் எகிப்து நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே இந்த தொடரில் பட்டம் வென்று வந்த நிலையில், அதனை இப்போது அனஹத் சிங் தகர்த்துள்ளார்.
இந்த வரலாற்று வெற்றிக் குறித்து தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''2026 உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கம் வென்று, உலக இளையோர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அனஹத் சிங்கை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அவரது இந்தச் சாதனை, இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;
"ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியா பொன்னான மைல்கல்லைப் பதித்துள்ளது.
2026 உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த அனஹத் சிங்குக்கு வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம், வளரும் ஸ்குவாஷ் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு பொன்னான பாதையை நீங்கள் வகுத்துள்ளீர்கள்." என தெரிவித்துள்ளார்.
English Summary
PM congratulates Anahat Singh for winning the World Junior Squash Championship title