மருத்துவர்களாக இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகி சிவில் சர்வீஸில் அசத்தும் பஞ்சாப் சகோதரர்கள்; UPSC வெற்றிப் பயணம்..!
Punjab brothers who transitioned from being doctors to becoming IAS and IPS officers excelling in the civil services
பஞ்சாப்பைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மருத்துவத் துறையிலிருந்து இந்தியக் குடிமைப் பணிகளுக்குத் தேர்வாகி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்ற செய்தி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள விகாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் அஜய் பால் சர்மா மற்றும் அமித் பால் சர்மா. இந்த சகோதரர்களின் தந்தை அமர்ஜித் பால் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். தாய் பிரேம் சர்மா குடும்பத் தலைவி. குறித்த சகோதரர்களுக்கு பெற்றோர் அளித்த ஊக்கத்தினால் லுதியானாவிலேயே தங்களின் ஆரம்பக் கல்வியை முடித்த இவ்விருவரும், முதலில் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.
மூத்த சகோதரரான அஜய் பால் சர்மா பல் மருத்துவப் படிப்பையும் (Dental Surgery), இளைய சகோதரர் அமித் பால் சர்மா பாபா ஃபரீத் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) மருத்துவப் படிப்பையும் படித்து முடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மருத்துவப் படிப்பை முடித்த போதிலும், மக்களுக்குச் சேவை செய்யும் ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்காக இருவரும் யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராயியுள்ளனர்.
அதன்படி, மூத்த சகோதரரான அஜய் பால் சர்மா கடந்த 2011-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாகத் தேர்வாகியுள்ளார். உத்தரப் பிரதேச கேடரில் இணைந்த இவர், ஷாம்லி, ஜான்பூர், நொய்டா மற்றும் ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் கண்டிப்பான அதிகாரியாகப் பெயரெடுத்துள்ளார்.
குறிப்பாக பிரயாக்ராஜில் அடீக் அகமதுவின் மாஃபியா கும்பலை ஒடுக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். தற்போது பிரயாக்ராஜ் காவல் ஆணையரகத்தில் கூடுதல் காவல் ஆணையராக (DIG) பணியாற்றி வருகிறார்.
அடுத்து, இளைய சகோதரரான அமித் பால் சர்மா 2016-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியாகத் தேர்வாகியுள்ளார். இவர் கௌசாம்பி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, பிரயாக்ராஜ் வளர்ச்சி அதிகார சபையின் துணைத் தலைவர், மீரட் மாநகராட்சி ஆணையர், சோன்பத்ரா தலைமை வளர்ச்சி அதிகாரி போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
குறிப்பாக, 2025 மகா கும்பா மேளா ஏற்பாடுகளின் போது பிரயாக்ராஜில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தியதிலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மருத்துவத் துறையில் தங்கள் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், நாட்டின் மிகக் கடினமான யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கான உன்னதப் சேவையில் ஈடுபட்டு வரும் இந்தச் சகோதரர்களின் சாதனைப் பயணம் பலருக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. தற்போது இணையத்தில் இவர்கள் இருவரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
English Summary
Punjab brothers who transitioned from being doctors to becoming IAS and IPS officers excelling in the civil services