''நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை; இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்''; சித்தராமையா அறிவிப்பு..!
Siddaramaiah announces that he will not contest elections again
''வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை'' என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் பகுதியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் மேலும் கூறியதாவது; இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை என்று குறிப்பிட்டதோடு,அரசியலில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாகத் தொடர்ந்து ஒலிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னை கேட்டு வருகின்றதாகவும், ஆனால், இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்று தான் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனக்கு தற்போது 79 வயதாகிறது என்றும், எங்கள் அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை என்றும்,முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2028-ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு 82 வயதாகியிருக்கும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆண்டாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கியதாகவும், அதில் தோல்விகளையும் வெற்றிகளையும் கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படாமலும், தனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்காமலும் இருந்ததில் தான் மனநிறைவு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் உருவாகியுள்ளது. இன்று அரசியல் முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய பின்னணியில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் 50 ஆண்டுகளாக, மாநில மக்கள் என்னை அவர்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழிநடத்தி வந்துள்ளதாகவும், அந்த நன்றிக்கடன் என் மீது உள்ளதாகவும், எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Siddaramaiah announces that he will not contest elections again