காத்திருப்பில் கேரளா...! தென்மேற்கு பருவமழை வருகையில் தாமதம்...! - தமிழகத்திற்கு என்ன பாதிப்பு...?
Kerala waiting list Delay arrival southwest monsoon What impact Tamil Nadu
அந்தமான் தீவுகள் பகுதியில் கடந்த 16-ந்தேதி தென்மேற்கு பருவக்காற்று தொடங்கிய நிலையில், அதன் தொடர்ச்சியாக கேரளாவில் மே 26-ந்தேதி பருவமழை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல காற்று சுழற்சி மாற்றங்கள் காரணமாக, பருவக்காற்று கேரளாவை எட்டுவதற்கான சூழல் தற்போது முழுமையாக சாதகமாக இல்லை என வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக, இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழையின் வருகை கேரளாவில் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி கேரளாவில் பருவமழை தொடங்குவது வழக்கமாக இருந்தாலும், இந்த முறை ஜூன் 3 அல்லது 4-ந்தேதியையொட்டி மழை தொடங்கக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், பருவமழையின் ஆரம்ப கட்டம் இந்த முறை வலுவாக இல்லாமல், மிதமான தன்மையுடன் காணப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழைச் செயல்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) நீலகிரி, தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kerala waiting list Delay arrival southwest monsoon What impact Tamil Nadu