''மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை''; 'We The Leaders' விழிப்புணர்வு மாநாட்டில் அண்ணாமலை பேச்சு..!
Annamalai speech at We The Leaders awareness conference
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘We The Leaders’ விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 06 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, ''போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன், யாரையும் பயன்படுத்த விட மாட்டோம். கோவில், கல்வி நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். காலை நேரத்தில் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் விற்பனையை தடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். புதிய பார்களை அனுமதிக்க கூடாது; மறுவாழ்வு மையங்களை சீர்படுத்த வேண்டும். விதி மீறலில் ஈடுபடும் FL2 பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என 06 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மாநாட்டில் பேசிய அண்ணாமலை கூறியதாவது;

''நான் ஒரு இந்து. ஆனால், வீட்டில் இருந்து வெளியே வரும்போது, மதத்தையும், சாதியையும் வீட்டினுள்ளே வைத்து பூட்டிவிட்டு, சாமான்யனாக, அனைவருக்கும் பொதுவானவராக உங்களுக்கு முன் வருகிறேன். மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான். சமமாக இருப்பான் என்று குறிப்பிட்டுள்ளார். கரூரில் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் இனாம் நிலத்தை கொடுத்ததற்கு தவெக அரசுக்கு ஆதரவாக பேசிவிட்டதால், நான் இந்து விரோதி என்கிறார்கள். விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து கோயிலில் பணிபுரிபவர்களுக்கு இனாம் நிலத்தை வழங்குவதுதான் வழக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரத்தில், கோயில் சொத்தை மீட்போம். ஆனால், இனாம் நிலமும் கோயில் சொத்தும் சமம் கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளார். எச். ராஜா, 2024-இல் இனாம் நிலத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார். அவர் இந்து விரோதி அல்ல. 2026 தேர்தல் அறிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது தேர்தல் அறிக்கையில் இதனை அறிவித்துள்ளார். அவர் இந்து விரோதி அல்ல. ஆனால், இன்று நான் பேசியதும் என்னை இந்துவிரோதி என்று சொல்கிறார்கள்'' என்று அண்ணாமலை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
English Summary
Annamalai speech at We The Leaders awareness conference