மேகமூட்டம்...இடி, மின்னல்...பலத்த காற்று...! தென் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களை வெளுத்து வாங்கப்போகும் கனமழை...!
Cloudy thunder lightning strong winds Heavy rains to lash Southern and Western Ghats districts
தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் கேரளக் கரையை எட்டும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வானிலை அமைப்புகளின் தற்போதைய நிலவரப்படி, தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழகப் பகுதிகளின் மேல் கீழ்மட்ட வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளை ஒட்டியும் மேலடுக்கில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.மேலும், கிழக்கு விதர்பா பகுதியிலிருந்து தெற்கு கேரளம் வரை தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் புதுவை வழியாக காற்றழுத்த தாழ்வு நீட்சி நிலவி வருவதால் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

இன்று தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களும் இந்த மழை எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.வருகிற 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
5-ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மத்திய மாவட்டங்கள் வரை மழை பரவும் சூழல் காணப்படுகிறது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை, மதுரை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
6-ஆம் தேதி தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடையக்கூடும். குறிப்பாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், பகல் நேரங்களில் வெப்பச் சோர்வு மற்றும் உடல் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Cloudy thunder lightning strong winds Heavy rains to lash Southern and Western Ghats districts