ஆன்லைன் பார்ட்-டைம் வேலை மோசடி.. தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கூடுதல் வருமானம் தேடும் இளைஞர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்கள், “பார்ட்-டைம் வேலை”, “கூகுள் மேப்ஸ் ரிவ்யூ கொடுத்தால் பணம்” எனக் கூறி டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்கின்றனர்.

முதலில் சில சிறிய பணிகளை வழங்கி, அவற்றை முடித்ததும் உண்மையாகவே பணம் செலுத்தி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ஆன்லைன் முதலீடு அல்லது கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பணம் செலுத்தச் செய்கின்றனர்.

தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை வீடியோவில் இடம்பெற்றுள்ள உதாரணத்தில், ஒருவர் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்கிறார். பணம் திரும்ப வராத நிலையில், மேலும் ரூ.50 ஆயிரம் செலுத்தினால்தான் முதலீடு மற்றும் லாபத்தைப் பெற முடியும் என மோசடி கும்பல் கூறுகிறது. மீண்டும் பணம் செலுத்திய பிறகு கணக்கு முடக்கப்பட்டு, அதை மீட்க மேலும் பணம் கேட்கப்படுகிறது.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, தெரியாத டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் குழுக்களில் வரும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வேலை வழங்குவதாக கூறும் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை நேரடியாக சரிபார்க்க வேண்டும் என்றும், முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை SEBI Check போன்ற அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்க்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

“முதலில் பணம் செலுத்துங்கள்; பின்னர் அதிக பணம் கிடைக்கும்” என்ற வாக்குறுதியே மோசடிக்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறி என்பதால், பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online part time job scam Tamil Nadu Cyber ​​Crime Police issue warning


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->