அமித் ஷாவை சந்தித்ததும் விஜய் பல்டி அடித்தாரா? மாற்றி மாற்றி பேசுவது ஏன்?தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!
Did Vijay make a U turn after meeting Amit Shah Why is he contradicting himself Dayanidhi Maran levels sharp criticism
தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு மாறிவிட்டதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அமித் ஷாவை சந்தித்த பிறகு தொகுதி மறுவரையறை தொடர்பான விஜய்யின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த வாரம் 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என தவெக அரசு தீர்மானம் நிறைவேற்றியதாக தயாநிதி மாறன் குறிப்பிட்டார். ஆனால், தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய விஜய், மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பது சட்டரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பேசிய தயாநிதி மாறன், “முதலில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று தீர்மானம் போட்டுவிட்டு, அமித் ஷாவை சந்தித்த பிறகு நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லப் போகிறாரா? அமித் ஷாவை பார்த்ததும் பயம் வந்துவிட்டதா? முதல்வர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்” என விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தின் மக்களவை பிரதிநிதித்துவம் தற்போதைய அளவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும், இதற்காகவே தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்திலும் தவெக அரசை தயாநிதி மாறன் விமர்சித்தார். “கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மேகதாது அணை தொடர்பாக பேசியபோது, தமிழக முதல்வர் விஜய் ஏன் அதற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், காவிரி நீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும், தமிழகத்தின் முக்கியமான மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் முதல்வர் விஜய் தெளிவான மற்றும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரத்தில் விஜய்யின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை தமிழக மக்களுக்கு அவர் விளக்க வேண்டும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
English Summary
Did Vijay make a U turn after meeting Amit Shah Why is he contradicting himself Dayanidhi Maran levels sharp criticism