''சுதந்திரமாக செயல்படும் நீதியரசர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது கண்டிக்கத்தக்கது'': எழுத்தாளர் சோ.தர்மன்..! - Seithipunal
Seithipunal


கீழ்மை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின்  நீதியரசர்கள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லை, இவ்வாறு சுதந்திரமாக செயல்படும் நீதிபதிகளை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், ஜாதிய மனோபாவத்துடன் நீதிமன்றத்தில் செயல்படுவதாக, வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சுமத்த, விஷயம் போராட்டமாக மாறி விட்டது. இக்குற்றச்சாட்டு, நீதித்துறையின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல உள்ளது.

நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை பற்றி விவாதிக்கலாம்; கருத்துக்கள் கூறலாம். ஆனால், நீதிபதிகள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்பட்டால் என்னவாகும்; நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை, தகுந்த சாட்சியங்கள் இல்லாததால், நீதிபதி ஒருவர் விடுதலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

குற்றவாளியும் நீதிபதியும் ஒரே ஜாதி; அதனால் விடுதலை செய்து விட்டார் என்றோ, தண்டனை வழங்கி விட்டால், குற்றவாளிக்கு எதிர் ஜாதி என்பதால், நீதிபதி தண்டித்து விட்டார் என்றோ பேசினால், நீதித்துறை என்னவாகும்; நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டு, இதுவரை எந்த நீதிபதியின் மீதும் சுமத்தப்பட்டதில்லை. சில ஆண்டுகளுக்கு முன், என் முகநுால் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டி, நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு சொல்லியிருந்தார். அது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, மதுரையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், அவரை சந்தித்தேன். அவர் உணவு சாப்பிட உட்கார்ந்திருந்த நிலையில், எதிரே நின்று, 'நான் தான் எழுத்தாளர் சோ.தர்மன்' என்றேன்.

சடாரென எழுந்து வந்து, என் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், அவருக்கு அடுத்த சேரில் என்னை அமர வைத்தார். பரிமாறுகிறவர்களிடம் சொல்லிச் சொல்லி எனக்கு பரிமாற வைத்ததோடு, நான் கூனிக்குறுகி அமர்ந்திருக்க, வெகு நாட்கள் பழகிய ஒரு நண்பரை போல் பல விஷயங்களை பேசினார்.

ஜாதிய மனோபாவம் கொண்டவராக இருந்தால், நான் வணக்கம் வைத்தவுடன் பதில் வணக்கம் சொல்லி விட்டு பேசாமல் இருந்திருப்பார். ஒரு உயர்நீதிமன்ற நீதியரசர் தன் அருகில் என்னை அமர வைத்து என்னுடன் பேசிக்கொண்டே உணவருந்துகிறார் என்றால் அவரிடம் எப்படி ஜாதி துவேஷம் இருக்கும் .

என்னைப் பொறுத்த வரையில் கீழ்மை நீதிமன்றங்களிலும் சரி,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் எதிலுமே நீதியரசர்கள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றே கூறலாம்.

என்னைப் பொறுத்தவரை சுதந்திரமாக செயல்படும் நீதியரசர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல் பாடுகள் கண்டிக்கத் தக்கவை.இவ்வாறு அந்த பதிவில் எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Writer So Tharman says it is condemnable to try to control independent judges


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->