இன்று விண்ணில் சீறி பாய்கிறது நிசார் செயற்கைகோள்.!!
today launch isro nasa gslvf 16 rocket
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார், இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது. மேலும், ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

'நிசார்' செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 392 கிலோ எடையை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையை சேர்ந்தது ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளையும் வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும். 'நிசார்' செயற்கைகோள் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
அதாவது பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் உள்ளிட்டவற்றை கொண்டதாகும்.
இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதன் வேலைகளை இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
English Summary
today launch isro nasa gslvf 16 rocket