விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி: அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு; ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
Worker Killed in Virudhunagar Firecracker Factory Explosion Case Filed Against Minister Vanni Arasu's Sister
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியில் இயங்கி வரும் “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து நேரிட்ட அந்தப் பட்டாசு ஆலையானது, தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி எம். ஜெயலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர், அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜெயலட்சுமி உள்ளிட்ட மற்ற 3 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாடசாமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் சகோதரிக்குச் சொந்தமான ஆலையில் தொழிலாளி உயிரிழந்த சம்பவமும், அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் காவல்துறை நடவடிக்கைகளும் அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Worker Killed in Virudhunagar Firecracker Factory Explosion Case Filed Against Minister Vanni Arasu's Sister