பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா! “என் குழந்தைதான் எனக்கு முதலில்” – வைரலான வதந்திக்கு அதிரடி பதில்
Joy Griselda turns down Bigg Boss offer My child comes first A strong response to the viral rumor
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜாய் கிரிஸில்டா. இவரைச் சுற்றிய விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தன்னைப் பற்றி தற்போது பரவி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான தகவலுக்கு ஜாய் கிரிஸில்டா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து குழந்தையின் பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து குழந்தைக்கு மொட்டை அடித்து, காது குத்தும் விழாவையும் கோவிலில் நடத்தியிருந்தனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.
இதற்கிடையே விஜய் டிவியின் பிரபலமான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜாய் கிரிஸில்டா போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. இந்த தகவல் வெளியானதும், சில நெட்டிசன்கள் ஜாய் கிரிஸில்டா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
“இப்போதுதான் இந்த விவகாரத்தின் பின்னணி புரிகிறது. எல்லாமே பிக் பாஸ் வாய்ப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் தானா?” என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால் ஜாய் கிரிஸில்டா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானார்.
இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “A HEARTFELT UPDATE” என்ற தலைப்பில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த சில நாட்களாக தான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் செல்ல இருப்பதாக செய்திகள் பரவி வருவதாகவும், அந்த செய்தியைத் தொடர்ந்து தனக்கு கிடைத்த அன்பும் ஆதரவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை நிகழ்ச்சிக்கு தேர்வு செய்த விஜய் டிவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள அவர், “நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் செல்லப்போவதில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தையும் ஜாய் கிரிஸில்டா தனது பதிவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குட்டி மகன் ராகா இன்னும் மிகவும் சிறிய குழந்தை என்றும், அவனை தனியாக விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது ஒரு தாயாக தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் டிவி தரப்பில் இருந்து வாய்ப்பு வழங்கப்பட்டபோது, அதை மரியாதையுடன் நிராகரித்ததாகவும், இந்த முடிவு தனக்கு எளிதானதாக இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைதான் முதலிடம்” என்ற அவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இதன் மூலம், பிக் பாஸ் வாய்ப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் தான் கடந்த கால நிகழ்வுகளை பயன்படுத்தியதாக விமர்சித்தவர்களுக்கு ஜாய் கிரிஸில்டா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் போன்ற பெரிய வாய்ப்பை விட தனது குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வாய்ப்பையே நிராகரித்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ள இந்த விளக்கம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Joy Griselda turns down Bigg Boss offer My child comes first A strong response to the viral rumor