அமைச்சர் கீர்த்தனா இலாகா மாற்றமா? 3 அமைச்சர்கள் நீக்கம்? முக்கிய இலாகாக்கள் கைமாறும்..லண்டன் டிரிப்புக்கு பின் விஜய் முடிவு - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் முதல்வர் விஜய் லண்டன் செல்ல உள்ள நிலையில், அவர் தமிழகம் திரும்பியதும் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல் தவெக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் சிலருக்கு பதவி பறிபோக வாய்ப்புள்ளதாகவும், பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் பயணத்தை முடித்துவிட்டு விஜய் தமிழகம் திரும்பியதும், அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெக அமைச்சர்களின் 100 நாள் செயல்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை விஜய்யின் பார்வைக்கு சென்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களின் 100 நாள் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு, மூன்று அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகதீஸ்வரி, விஜய் பாலாஜி மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் செயல்பாடுகள் குறித்து கட்சி மேலிடத்தில் ஏற்கனவே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இறுதி முடிவு விஜய் தமிழகம் திரும்பிய பின்னர் எடுக்கப்படலாம் என்றும் தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனிடையே அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்குவது மட்டுமின்றி, முக்கிய இலாகாக்களையும் மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் அமைச்சர் கீர்த்தனாவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து முதலில் விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கட்சியில் செல்வாக்கு கொண்ட ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோரின் ஆதரவு கீர்த்தனாவுக்கு இருப்பதாகவும், இதன் காரணமாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இலாகாவை மட்டும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது கீர்த்தனாவிடம் இருக்கும் தொழில்துறை இலாகாவை மாற்றிவிட்டு, அவருக்கு சமூக நலத்துறையை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நிதித்துறையை நிர்வகிப்பதில் அமைச்சர் மரிய வில்சன் சிரமங்களை எதிர்கொள்வதாக விஜய் தரப்பில் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நிதித்துறையை அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தொழில்துறையை மரிய வில்சனிடம் ஒப்படைக்கலாமா என்ற பரிசீலனையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ்மோகனிடம் நிதித்துறையுடன், தற்போது முதல்வர் வசம் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையையும் கூடுதலாக ஒப்படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜ்மோகனிடம் தற்போது இருக்கும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றையும் பிரித்து வெவ்வேறு அமைச்சர்களுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறையை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வேளச்சேரி குமாருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்குவது குறித்தும், செய்தி மற்றும் விளம்பரத்துறையை அமைச்சர் ரமேஷிடம் கூடுதலாக ஒப்படைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவுக்கு வனத்துறையையும் கூடுதல் பொறுப்பாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அமைச்சர்களின் பதவி, இலாகா மற்றும் கூடுதல் பொறுப்புகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தவெக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

முதல்வர் விஜய் லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அமைச்சர்கள் பலரும் தங்களது பதவி மற்றும் இலாகாக்களை தக்கவைத்துக்கொள்ள தவெக மேலிடத்தில் இப்போதே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், விஜய்யின் லண்டன் பயணத்திற்கு பிறகு தவெக அமைச்சரவையில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன, யாருக்கு பதவி பறிபோகிறது, யாருக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படுகின்றன என்பதே தமிழக அரசியலில் அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cabinet reshuffle for Minister Keerthana Three ministers to be dropped Key portfolios to change hands Vijay to decide after his London trip


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->