பள்ளி வாகனங்களை இயக்கும் போது, மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் கடும் நடவடிக்கை!
When operating school vehicles consuming alcohol and using mobile phones will result in strict action
சிவகங்கை மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விளையாட்டு மைதானத்தில் காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து போக்குவரத்துத்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வாகனத்தின் நிறம், பள்ளி பற்றிய விபரம், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைப்பட்டைகளின் நிலை, அவசரக்கதவின் இயக்க நிலை, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் இருக்கை நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுநரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், நாடாக்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இதில் குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து, சான்றுகள் பெற்ற பின்புதான் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் வாகனத்தினை இயக்குவதற்கு முன்னர் வாகனத்தினை முறையாக பரிசோதனை செய்த பின்னரே இயக்கிட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது முழு கவனத்துடன் வாகனத்தை இயக்குவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக் கூடாது. வாகனம் இயக்கும் போது, மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் உள்ளிட்ட செயல்முறைகள் முற்றிலும் இருத்தல் கூடாது. எதிரில் வாகனம் எதுவும் வரவில்லை என உறுதி செய்த பின்னரே, பிற வாகனத்தினை கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
வாகனத்தில் விதிமுறைகளின்படி குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகளை மட்டுமே ஏற்றிட வேண்டும். குழந்தைகள் வாகனத்தில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் அதனை கவனித்து நிதானமாக வாகனத்தினை இயக்கிட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியினையும், முதலுதவி வழங்குவது குறித்த பயிற்சியினையும் பெற்றிட ஏதுவாக அதற்கான பயிற்சியும் இந்நிகழ்வின் வாயிலாக வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சிகளும் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 7 வட்டாரங்களுக்குட்பட்ட 60 பள்ளிகளைச் சார்ந்த 286 பள்ளி வாகனங்கள் மற்றும் காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய 2 வட்டாரங்களுக்குட்பட்ட 35 பள்ளிகளைச் சார்ந்த 268 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 95 பள்ளிகளைச் சார்ந்த 554 பள்ளி வாகனங்கள் மாவட்டத்தில் உள்ளன.
அதில் சிவகங்கை வட்டாரங்களைச் சார்ந்த 220 வாகனங்களும் மற்றும் காரைக்குடி வட்டாரங்களைச் சார்ந்த 185 வாகனங்களும் என மொத்தம் 405 வாகனங்களில் இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சிவகங்கை வட்டாரங்களைச் சார்ந்த 12 வாகனங்களும், காரைக்குடி வட்டாரங்களைச் சார்ந்த 14 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் குறைபாடுகள் காரணமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியில் உள்ள சில வாகனங்கள் , பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின், ஆய்விற்கு முறையாக உட்படுத்தப்பட்டு, பின்னர் சான்றுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அமல அட்வின் அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.கருப்பனன் மற்றும் காவல்துறை, பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
English Summary
When operating school vehicles consuming alcohol and using mobile phones will result in strict action