தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு கோலாகலம்...காவிரி கரையோரம் குவிந்த புதுமண தம்பதியர்!
Throughout Tamil Nadu there is a festive atmosphere Newlywed couples gathered along the banks of the Kaveri
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா அனைத்து தரப்பினராலும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் காவிரி கரையோரம் வழிபாடு செய்துவருகின்றனர்.
ஆடி மாதத்தில் 18-வது நாள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆடி பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆற்றுப்பெருக்கு எனக்கூறும் இந்நாளில் உழவர்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு ஆகியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும் என்பது உழவர்களின் கணக்கு.
அதன்படி நதிகளை தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் ஆற்றில் புனிதநீராடி கரையோரம் சுத்தம் செய்வார்கள். பின்னர் அங்கு பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவர்.
தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அது மட்டுமின்றி தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்களை செய்து ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா அனைத்து தரப்பினராலும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கைகளில் மங்களப் பொருள்களை பாத்திரங்களில் எடுத்து வந்து காவிரி ஆற்றின் படித்துறையில் தலைவாழை இலையை விரித்து அதில் பழங்கள், பலகாரங்கள், அருகம்புல் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து மூத்த சுமங்கலி பெண்கள் முதலில் மற்றவர்களுக்கு மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டினர், புதுமண தம்பதியர் புத்தாடை உடுத்தி காவிரி அன்னையை வணங்கி ஆடிப்பெருக்கை கொண்டாடினார்கள்.
காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களான ஈரோடு, பவானி கூடுதுறை, மேட்டூர் அணை, பரமத்தி, குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார், திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
English Summary
Throughout Tamil Nadu there is a festive atmosphere Newlywed couples gathered along the banks of the Kaveri