ஒரே இரவில் பல மடங்கு உயர்ந்த நீர்வரத்து...! ஒகேனக்கல்லில் இன்றைய நீர்வரத்து எவ்வளவு தெரியுமா...?
Water levels rose several times overnight Do you know what water level Hogenakkal today
கர்நாடகா பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழையால் காவிரி ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, அதன் தாக்கம் தருமபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல்லில் தெளிவாக பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து ஏற்றத் தாழ்வுடன் இருந்த நிலையில், நேற்று மாலை வரை 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி திடீரென 4,000 கனஅடியாக உயர்ந்தது.

இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இயற்கையின் இந்த மாபெரும் காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் திரண்டனர்.
பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இயற்கை அழகை ரசித்த அவர்கள், தொங்கு பாலத்தில் நின்று பாறைகளுக்கு நடுவே பாய்ந்து விழும் வெள்ளநீரைக் கண்டு உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்ததுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளும் ஆற்றில் நீராடி விடுமுறையை கொண்டாடினர்.அதே நேரத்தில், மீன் உணவுகளை வாங்கி பூங்கா பகுதிகளில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழும் காட்சிகளும் காணப்பட்டன.
இந்நிலையில், தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், மழை அருளால் ஒகேனக்கல் மீண்டும் உயிர்த்தெழுந்து, சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது.
English Summary
Water levels rose several times overnight Do you know what water level Hogenakkal today