‘துரந்தர்’ பிரச்சாரப் படம் அல்ல - நடிகர் மாதவன் ஓபன் டாக்!
Dhurandhar is not a propaganda film Actor Madhavan speaks out
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் எழுந்து வரும் அரசியல் விமர்சனங்கள் மற்றும் தனது திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அதன் தலைவர்களுக்கோ எதிராக பதிவிட்டதில்லை. மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரோ அல்லது பிரதமரோ நல்ல செயல்களைச் செய்தால், அதை பாராட்டுவது நமது கடமை" என்று கூறினார்.
மேலும், "நல்ல விஷயங்களை பாராட்டுவதை விமர்சிப்பவர்களின் பார்வையில்தான் பிரச்சினை இருக்கிறது. சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்காக என்னுடைய எண்ணங்களையோ நிலைப்பாட்டையோ நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்" என்றும் மாதவன் தெரிவித்தார்.
தொடர்ந்து, தனது 'துரந்தர்' திரைப்படம் அரசியல் பிரச்சாரப் படம் என்ற விமர்சனங்களையும் அவர் மறுத்தார். "அந்த படம் பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்டு, நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட கதை. இந்தியாவை நேர்மறையான கோணத்தில் உலகிற்கு எடுத்துக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரங்களை நேர்மையாக திரையில் கொண்டு வருவதே எனது பொறுப்பு" என்றார்.
இதற்கிடையில், நடிகர் மாதவன் தற்போது 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜிடிஎன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
English Summary
Dhurandhar is not a propaganda film Actor Madhavan speaks out