மீனவர்களை உடனே விடுவிங்க...இலங்கை அரசு இதுபோன்று அவ்வப்போது செய்வது தவறு...! - இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்
Release fishermen immediately wrong Sri Lankan government to do such things from time to time Indian Foreign Secretary Vikram Misri insists
இலங்கையில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான விக்ரம் மிஸ்ரி, அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இலங்கைப் பயணம் என்பதால் இந்தச் சுற்றுப்பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கொழும்பில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்புகளின் போது, இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் அருணி ரணராஜா ஆகியோரை விக்ரம் மிஸ்ரி நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்களின் பிரச்சினை முக்கிய அம்சமாக எடுத்துரைக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மீனவர்களை தாமதமின்றி விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்டளிப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய தரப்பு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், மீனவர்கள் தொடர்பான சிக்கல்களுக்கு நீடித்த மற்றும் சுமூகமான தீர்வை உருவாக்கும் நோக்கில் இருநாட்டு அரசுத் துறைகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கடலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அணுகுமுறையுடன் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா – இலங்கை உறவுகளில் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வரும் முக்கிய பிரச்சினைகளில் மீனவர் விவகாரம் ஒன்றாகும். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடைபெற்று வருவதால் கடலோர மீனவக் குடும்பங்களில் தொடர்ந்து அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி 18 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 128 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Release fishermen immediately wrong Sri Lankan government to do such things from time to time Indian Foreign Secretary Vikram Misri insists