இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் பேரவலம்..!
The tragic spectacle of Tamil Nadu fishermens boats seized by the Sri Lankan Navy being smashed to pieces
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மயிலிட்டி மீன்பிடி இறங்குதளத்தில் விறகுகளுக்காக உடைக்கப்படுகின்றன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் 3,500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 500 படகுகளை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும், சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.
அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மற்றும் புதுச்சேரியை மாநிலங்களைச் சேர்ந்த 200 படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கபட்டுள்ளன.
இவ்வாறு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களினால் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அங்குள்ள தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மயிலிட்டி துறைமுகத்தில் நிற்கும் 125 தமிழக மீன்பிடி படகுகளில் 40 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் நாட்டுடமையாக்கப்பட்ட 85 படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி மீன்பிடி இறங்குதளத்தை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுவதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக இலங்கை மீன்வளத் துறையினரால் அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தன. இதனடிப்படையில் சேதடைந்த படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.
இந்நிலையில், மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் படகுகளை உடைத்து விறகுகள், மரக்கட்டைகளாக்கும் பணிகளை அந்நாட்டு மீன்வளத்துறை தொடங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சமும், நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
The tragic spectacle of Tamil Nadu fishermens boats seized by the Sri Lankan Navy being smashed to pieces