கள்ளுக்குத் தடை ஏன்? உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த பரபரப்பு விளக்க அறிக்கை!
TN Govt Defends Toddy Ban in High Court Citing Health Risks and Adulteration
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும் விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை மறுஆய்வு செய்யக் கோரி, தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்தப் பதில் மனுவில், "கள்ளில் இயற்கையாகவே ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும், அதில் போதையைச் செயற்கையாக அதிகரிக்கக் குளோரல் ஹைட்ரேட் மற்றும் ஊமத்தை போன்ற அபாயகரமான மயக்கமூட்டும் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இத்தகைய கலப்படக் கள் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் தீங்கை விளைவிப்பதுடன், உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது. ஒவ்வொரு பனை மற்றும் தென்னை மரமும் தனித்தனி உற்பத்தி மையமாகச் செயல்படுவதால், கள் சேகரிப்பு முதல் விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் கலப்படத்தைக் கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்றாகும்" என அரசு விளக்கியுள்ளது.
மேலும், பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்ட அரசுத் தரப்பு, "புளிக்காத பானங்களான 'நீரா' மற்றும் 'பதனீர்' ஆகியவற்றை மரங்களில் இருந்து இறக்கவும், அவற்றை அப்படியே விற்பனை செய்யவும் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு பனை பொருட்கள் மேம்பாட்டு வாரியம் மூலமாகச் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பனை வெல்லம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிற்கும் இது பயன்படுத்தப்படுவதால் பனைத் தொழிலாளர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
புளித்த தயாரிப்பான கள்ளுக்கு மட்டுமே தடை தொடர்வதாகவும், ஏற்கனவே இது தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட தமிழக அரசு, இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதையேற்று, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராவதற்காக வழக்கின் விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
TN Govt Defends Toddy Ban in High Court Citing Health Risks and Adulteration