மருத்துவமனையில் நேர்ந்த கொடூரத் தவறா? எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக எழுந்த புகாரால் கோவையில் பரபரப்பு!
Was it terrible mistake hospital complaint HIV positive blood transfusion causes stir Coimbatore
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 40 வயதுடைய நெசவுத் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து ஆட்சியரிடம் பரபரப்பான புகார் மனு அளித்தார். தனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்திய பின்னரே எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த நெசவுத் தொழிலாளிக்கு முதலில் இரட்டை குழந்தைகளாக ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்துள்ளனர். அதன்பின்னர் மேலும் ஒரு மகன் பிறந்துள்ளார்.இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அவரது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பின்னர், குடும்பத்தினர் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.வீட்டுக்கு திரும்பிய சில நாட்களில் சிறுமியின் காது அருகே கட்டிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மீண்டும் அவரை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.அந்த பரிசோதனையில் கணவன், மனைவி இருவருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெசவுத் தொழிலாளி கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது எச்.ஐ.வி. பாதித்த நபரின் ரத்தம் தவறுதலாக தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாக தாங்கள் அறிந்ததாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் நேரடியாக சென்று விளக்கம் கேட்டபோதும், இந்த விவகாரத்தை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று தங்களிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.பல ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும், எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்குமாறு ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினார்.இதற்கிடையே அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரத்தம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சிறுமிக்கு ரத்த சிவப்பு அணுக்கள் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ரத்த தானம் வழங்கிய நபரிடம் பெறப்பட்ட ரத்தம் பிளாஸ்மா, ரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு 3 பேருக்கு வழங்கப்பட்டதாகவும், அவர்களில் மீதமுள்ள 2 பேருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரத்த தானம் வழங்கிய நபருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், வேறு ஏதேனும் மருத்துவச் சிகிச்சை அல்லது ஊசி செலுத்தப்பட்டதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முழுமையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Was it terrible mistake hospital complaint HIV positive blood transfusion causes stir Coimbatore