100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஸ் உதவியாளர் தொடர்புடைய இடங்களில் மீண்டும் திடீர் சோதனை: 44 ஆவணங்கள், லேப்டாப் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சிக் காலத்தில் (2021-26) தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி மோசடியில் ஈடுப்ப விவகாரத்தில் அன்பில் மகேஸ் உதவியாளர் தொடர்புடைய இடங்களில் இன்று மீண்டும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 44 ஆவணங்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்வு மற்றும் டிடிசிபி அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாகப் புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்த திமுக பிரமுகர் பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவருடன் தொடர்புடைய சுரேஷ், ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட் டுள்ளன.இந்நிலையில், அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் 20 வங்கிக் கணக்குகள் மற்றும் தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் முத்துகுமாரின் 29 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகள் உள்ளிட்ட 09 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை  நடத்தினர். அதில், 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 03 லேப்டாப்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஸிடம் 08 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், அவரது முன்னாள் சிறப்பு உதவியாளர் அருள் முருகன் மற்றும் வாளாடி கார்த்திக் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துகுமாரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கில் மேலும் தகவல்களை சேகரிக்கும் வகையில், பி.டி.அரசகுமார் மற்றும் தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் உறவினர் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உதவியாளர்களுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூவிருந்தவல்லி மற்றும் நாவலூர் ஆகிய 05 இடங்களில் உள்ள வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த அதிரடி சோதனை முடிவில் வழக்கு சம்பந்தப்பட்ட 44 ஆவணங்கள் மற்றும் 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது அதில் உள்ள தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறதோடு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

44 documents and a laptop seized during fresh raids at locations linked to Anbil Maheshs aide


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->