சிவகார்த்திகேயன் படம் டிராப் ஆன விவகாரம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!
The issue of the shelved Sivakarthikeyan film Venkat Prabhu puts an end to the controversy
சிவகார்த்திகேயனை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருந்த திரைப்படம் சில காரணங்களால் தொடங்கப்படாமல் போன விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்யை வைத்து ‘கோட்’ திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். ‘கோட்’ பட வாய்ப்பு கிடைத்ததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தள்ளி வைத்த வெங்கட் பிரபு, பின்னர் அந்தப் படத்தை தொடங்கும் திட்டத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் வேறு படங்களில் நடிக்கச் சென்றதால், வெங்கட் பிரபு இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் வெங்கட் பிரபுவின் தந்தையும், மூத்த இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், பெயரை குறிப்பிடாமல் ஒரு நடிகர் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு மற்றொரு இயக்குநரின் படத்தை முடித்துவிட்டுத்தான் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிப்பதாக அந்த நடிகர் கூறியதாகவும், இதனால் தனது மகன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாகவும் கங்கை அமரன் கூறியிருந்தார். இந்தப் பேச்சு சிவகார்த்திகேயனை குறிப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.
இதனால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தற்போது வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்போதும் தனக்கு அன்பான சகோதரரும் நண்பரும்தான் என்றும், இருவருக்கும் இடையே எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது படம் தாமதமானதால் ஒரு தந்தையாக கங்கை அமரனுக்கு ஆதங்கமும் ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் படத்தின் முழு பின்னணியும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். தான் தொழில் சார்ந்த விஷயங்களை அதிகம் பேசாதவர் என்றும், தனது தந்தையிடம்கூட பட வேலைகள் குறித்து விரிவாக பகிர்ந்து கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில காரணங்களால் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த திரைப்படம் தொடங்கப்படவில்லை என்றும், அதைத்தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் வெங்கட் பிரபு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், சரியான நேரமும் நல்ல கதையும் அமைந்தால் எதிர்காலத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயன்-வெங்கட் பிரபு இடையே மனக்கசப்பு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
The issue of the shelved Sivakarthikeyan film Venkat Prabhu puts an end to the controversy