4 மாத ஆட்சியில் அடுத்தடுத்து வாபஸ் பெறப்படும் உத்தரவுகள்! ஜோதிடர் நியமனம் டூ.. RTI அரசாணை வாபஸ் வரை..ஏன் இந்த தொடர் ‘யூ-டர்ன்’? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் அரசு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் எதிர்ப்புகள் எழுந்த பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கியது முதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களுக்கு விலக்கு அளித்த அரசாணை வரை, அடுத்தடுத்து உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டிருப்பது நிர்வாகத்தில் முடிவெடுக்கும் விதம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அவரது ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரி பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து உத்தரவு வெளியான ஒரே நாளில் அந்த நியமனம் திரும்பப் பெறப்பட்டது.

அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் எத்தனை இடதுசாரிகள் உள்ளனர் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த வட்டாட்சியர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இடதுசாரி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த நிலையில், தங்களை குறிவைத்து இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டின. எதிர்ப்பு தீவிரமானதைத் தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை கட்டுப்படுத்தவும், மாணவர்கள் அதில் பங்கேற்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவு வெளியானதாக தகவல் பரவியது. இதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த உத்தரவும் பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கை கோரி டெண்டர் வெளியிடப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணையும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த நடவடிக்கையும் பின்னர் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி சொத்துவரி உயர்வு, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான அடிப்படை வசதிகளை ஆசிரியர்கள் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும் என்ற தகவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் சர்ச்சைகள் எழுந்தன. ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள் தீவிரமடைந்த பின்னர் அரசின் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறுவதற்கு விலக்கு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த அரசாணையும் திரும்பப் பெறப்பட்டது.

இதனால் தவெக அரசு ஆட்சிக்கு வந்த முதல் நான்கு மாதங்களில், முக்கியமான நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு, பின்னர் அவற்றுக்கு எதிர்ப்பு எழுந்ததும் வாபஸ் பெறப்பட்டதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபோன்ற தொடர் மாற்றங்கள் அரசின் முடிவெடுக்கும் நடைமுறை, அதிகாரிகளின் பங்கு மற்றும் கொள்கை முடிவுகளுக்கு முன்பான ஆய்வுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, சில முடிவுகள் தொடர்பாக முழுமையான நிர்வாக மற்றும் சட்டரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் உத்தரவுகள் வெளியிடப்படுவதால்தான் பின்னர் அவற்றை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மக்களின் நலன் மற்றும் எதிர்கால தாக்கங்களை கருத்தில் கொண்டு, அரசின் கொள்கை முடிவுகள் தெளிவான ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A series of orders withdrawn within just four months of governance From the appointment of an astrologer to the withdrawal of the RTI government order why this string of Uturns


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->