சினிமா விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறும் செயல்கள்! “அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ராதிகா சரத்குமார்
Actions crossing the line in the name of film criticism The government must take strict action Radhika Sarathkumar
தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சின்னத்திரை மற்றும் ஓடிடி துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘TOPCOS’ (Television & OTT Producers Council of South) என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் முன்னின்று இந்த அமைப்பை தொடங்கி வைத்துள்ளார்.
அமைப்பின் தொடக்க விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் சிலர் எல்லை மீறி செயல்படுவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். டிஜிட்டல் மீடியா வளர்ச்சிக்குப் பிறகு திரைப்படங்கள், நடிகர்கள், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசுவது சிலருக்கு எளிதாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய செயல்களுக்கு எதிராக கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில்தான் சிலர் தொடர்ந்து செயல்படுவதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளதாகவும் ராதிகா கூறினார். இதுபோன்ற தவறுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்பட்டு இதுபோன்ற செயல்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சினிமா விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களைப் பற்றி தற்போது யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கருத்து தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் ராதிகா சரத்குமார் குறிப்பிட்டார். இது உலகம் முழுவதும் பேசப்படும் பிரச்சினையாக இருந்தாலும், தமிழகத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
எல்லோரிடமும் ஸ்மார்ட்போன், இணைய வசதி மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதால், எங்கிருந்தாலும் திரைப்படங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதேசமயம், சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களைத் தாண்டியும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதாகவும் ராதிகா குறிப்பிட்டார்.
சில நேரங்களில் ஒரு திரைப்படம் நன்றாக இருந்தபோதிலும், வேண்டுமென்றே அந்தப் படம் நன்றாக இல்லை என்பது போன்ற தவறான விமர்சனங்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற செயல்கள் வருத்தமளிப்பதாகக் கூறிய ராதிகா, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தீவிரமாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் குமரன் சாரிடமும் தான் வலியுறுத்தியுள்ளதாகவும், இதனை தீவிரமாக கவனிக்காவிட்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Actions crossing the line in the name of film criticism The government must take strict action Radhika Sarathkumar