மதுராந்தகம் இடைத்தேர்தல்: “ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்” – பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
Maduranthakam Byelection A situation will arise where Aadhav Arjuna has to step down Premalatha Vijayakanth sharp criticism
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை விமர்சித்த அவர், அவரை வெற்றி பெறச் செய்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், மரகதம் குமரவேல் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவரை ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளமாக மதுராந்தகம் மக்கள் பார்ப்பதாகவும் விமர்சித்தார். மேலும், அவருக்கு மக்கள் தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த பிரேமலதா, சட்டப்பேரவையில் அவர் பேசும்போதெல்லாம் திமுகவை விமர்சிப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும், மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை என்றும் கூறினார். திமுக மீதான ஈகோ மற்றும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அவரது பேச்சுகள் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக ஆதவ் அர்ஜுனா ஏற்கெனவே சவால் விடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரேமலதா, “ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலைமை வரும். தேர்தல் முடிவுகள் வந்ததும் மாட்டிக்கப் போகிறீர்கள். தவளை தன் வாயால் கெட்ட கதையாக சிக்கிக்கொள்ளப் போகிறார். முடிவு வரும் நாளில் ஆதவ் அர்ஜுனா என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி, தற்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் பதவி விலகல் சவாலை மையமாக வைத்து பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maduranthakam Byelection A situation will arise where Aadhav Arjuna has to step down Premalatha Vijayakanth sharp criticism