“பாசம் என்றால் குடும்பத்துடன் வாழ வேண்டும்...கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும்”.. முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!
True affection means living with one family living with one wife Edappadi Palaniswami advice to Chief Minister Vijay
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாசம் குறித்து மேடைகளில் பேசுவது மட்டுமின்றி, அதை நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், தாராபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செப்டம்பர் 30ஆம் தேதி தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழக வெற்றிக் கழகம் தற்போது அதிமுகவினரை நம்பியே அரசியல் செய்யும் நிலைக்கு வந்துவிட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவினரை வைத்துத்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்துவிட்டது. தமிழகத்தை ஆள்வது அதிமுகதான். அதிமுகவினரை நம்பியே விஜய் அரசியல் செய்கிறார். அதிமுகவினரின் கதவை ஏன் தட்டிப் பிச்சை எடுப்பதுபோல் வாக்கு சேகரிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து விஜய்யின் குடும்பம் குறித்த பேச்சுகளை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, “உங்கள் வீட்டில் அண்ணனாக இருப்பேன், தம்பியாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பச்சைப் பொய். பாசம் என்று சொன்னால் தாய், தந்தையுடன் வாழ வேண்டும். கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும். பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். மேடைகளில் வீரவசனம் பேசினால் மட்டும் போதாது. நிஜ வாழ்க்கையிலும் அதனைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் வாழ்ந்து காட்டுகிறோம். மனைவி, பிள்ளைகளுடன் வாழ்வதுதான் உண்மையான பாசம். மக்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசி வாக்குகளைப் பெறுபவர்தான் விஜய்” என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்யின் அரசியல் அணுகுமுறையையும், அவரது பேச்சுகளையும் மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள இந்த விமர்சனங்கள், தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
True affection means living with one family living with one wife Edappadi Palaniswami advice to Chief Minister Vijay